அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் பிரமுகர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் தமது டிவிட்டர் பதிவில் தமிழ் மக்களை இலங்கையின் ‘சிறுபான்மை குழு’ என்று குறிப்பிட்டிருந்த ராஜாங்க திணைக்களம் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று  மாற்றம் செய்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ்  மக்களின் பிரமுகர்கள் குழு அமரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் லீசா பீற்றர்சன் தலைமையிலான  பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் அண்மையில் சந்திப்புக்களை நடத்தினர். இதன்பின்னர், இந்த அமெரிக்க அலுவலகங்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சிறுபான்மை குழுவாக சித்தரித்து தமது ட்விட்டரில் செய்தி வெளியிட்டன. அரசியல் தீர்வு குறித்து பேசுவதாக தமிழ் மக்களின் பிரமுகர்கள் குழுவும் இதற்கு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமல் அச் செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

சிறுபான்மை குழு என தமிழ் மக்களை சிறுமை படுத்தி அவர்களின் அரசியல் ஸ்தானத்தை குறைமதிப்பு செய்வதை தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE) என்ற தமிழ் இளையோர்களினால் வழிநடத்தப்படும் அமைப்பு ஆட்சேபித்து ராஜாங்க திணைக்களத்திற்கு ட்விட்டர் செய்தியிட்டது. அதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கதில்  உலகளாவிய சில முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவிக்க தொடங்கினர். இஸ்ரேல் நாட்டின் பிரபல சமூக விஞ்ஞானி பேராசிரியர் ஓரின் யிவ்டாசல் (Prof Oren Yiftachel ), ஓக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டேல் (Anuradha Mittal) , இந்தியாவின் பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மேத்தா பட்கர் ( Medha Patkar),  சமூக செயற்பட்டாளர் கலாநிதி  சுவாதி சக்கரபூர்த்தி ( Dr. Swati Chakraborty ) என பலரும் தமது ஆதரவை தெரிவிக்க தொடங்கினர்.

இந்நிலையில் இன்று அமரிக்க  ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு செயலகத்தின்  துணை செயலர் டொனால்ட் லூ (Donald Lu)  வுடன் டயஸ்போறா அலையன்ஸ் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்று நடந்தது. இச்சந்திப்பை தொடர்ந்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று  மாற்றம் செய்து  தமது ட்விட்டரில் ராஜாங்க திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

” “உதவிச் செயலாளர் லூ தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவையுடனான தனது சந்திப்பின் போது, இலங்கை தொடர்பிலான  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகள் மையமாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். நிரந்தர சமாதானம் மற்றும் அவர்களின் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக் குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்து கொள்கிறது.” என்று அந்த பதிவில்  குறிப்பிடப்பட்டிருக்கின்றது.